லண்டன் (இங்கிலாந்து):கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், பெரும்பாலும் எல்லைப் பகுதியான காசா நகர் பலத்த சேதத்தைச் சந்தித்து உள்ளது. முதலில், ஏவுகணைத் தாக்குதலால் தொடங்கிய இந்த போர், தற்போது தரைவழித் தாக்குதலில் வந்து நிற்கிறது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான இஸ்ரேல் - பாலஸ்தீன மக்கள் தங்களது உயிர், உடமைகள் மற்றும் உறவினர்களை இழந்து உள்ளனர்.
இதனிடையே, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்தன. குறிப்பாக, அமெரிக்கா ராணுவ உதவிகளையும் இஸ்ரேலுக்கு அளித்தது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாது, எதிர் தாக்குதலையும் அளிக்கத் தொடங்கினார். இந்த நிலையில்தான், நேற்றைய முன்தினம் காசா நகரத்தில் உள்ள அல்-அஹில் என்ற மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளானது.
இதில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயங்கள் உடன் போராடி வருகின்றனர். இவர்களுக்கு உள்ளூர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதாக ஹமாஸ் அமைப்பும், தவறுதலாக மருத்துவமனை மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவமும் குற்றம் சாட்டினர். இதற்கு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.