1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் அந்நாட்டுக்கும், வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்துக்கொண்டே வந்தது. இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காததால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது.
இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது. மேலும், விமான போக்குவரத்து, வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளும் தடைசெய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிரச்னைகளை தீர்க்க முடிவெடுத்த அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இருநாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்பட்ட தீவிர முயற்சியை மேற்கொண்டது.
பாலஸ்தீனியர்கள் கோரிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நிலத்தை இணைக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற அபுதாபியின் ஆட்சியாளரும் அமீரகத்தின் தலைவருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்றது. அதன் விளைவாக ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.