காத்மண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு நேபாளத்தில் உள்ள சுர்கெட் மாவட்டத்தில் இரவில் 11: 58 மணிக்கு முதல் நில நடுக்கம் ஏற்பட்டது.
முதல் நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி 8 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து நள்ளிரவு 1:30 மணி அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது நில நடுக்கம் சற்று வீரியத்துடன் 5 புள்ளி 9 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
இரண்டாவது நில நடுக்கம் பஜூராஸ் டாக்கோட் பகுதியில் உணரப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. நில நடுக்கத்தை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நில நடுக்கத்தால் பஜூரா நகர சாலைகள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் தற்போது வரை எந்த உயிர் சேதமோ பெரிய அளவில் பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என மீட்பு குழு அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். மேற்கு நேபாளம் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவிலான நில நடுக்கங்கள் பதிவாவதாக கூறப்படுகிறது.