சான் ஃபிரான்சிஸ்கோ(அமெரிக்கா): ட்விட்டரை கைப்பற்றியது முதல் எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக் வசதியை, அனைத்து பயனர்களுக்கும் கட்டணத்துடன் வழங்க முடிவு செய்தார்.
அதன்படி ட்விட்டரின் ப்ளூ டிக் வசதியைப் பெற மாதம் எட்டு டாலர் சந்தா செலுத்த வேண்டும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் ஏராளமானோர் போலி கணக்குகளுக்கும் சந்தா செலுத்தி ப்ளூ டிக் வசதியை வாங்கினர். இதனால் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. இதன் எதிரொலியாக பல்வேறு விளம்பர நிறுவனங்கள் ட்விட்டரை விட்டு விலகின. இதன் காரணமாக ப்ளூ டிக் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று(டிச.12) முதல் ப்ளூ டிக் வசதி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, சாதாரண பயனர்கள் ப்ளூ டிக் வசதியை வைத்துக் கொள்ள மாதம்தோறும் 8 டாலரும், ஐஃபோன் பயனர்கள் 11 டாலரும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூ டிக் பயனாளர்கள் 1080பி வீடியோக்களை பதிவிடவும், ட்வீட்களை எடிட் செய்யவும் முடியும்.