தென் ஆப்பிரிக்கா:தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மாகாணத்தில் போக்ஸ்பர்க்கின் புறநகரில் குடியிருப்புப் பகுதி உள்ளது. அங்கு சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தற்காலிமாக குடிசைகளைக் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த குடியிருப்புப் பகுதியில் நேற்று(ஜூலை 5) இரவு திடீரென விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. விஷவாயு அப்பகுதி முழுவதும் பரவியதில், அதனை சுவாசித்த தொழிலாளர்கள் பலரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதேபோல், விஷ வாயுவை சுவாசித்து பாதிக்கப்பட்டிருந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷவாயுக் கசிவால் 24 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
தங்க சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரேட் வாயு சிலிண்டர்கள் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு சிலிண்டரில் இருந்து வாயு கசிந்ததன் காரணமாகவே இந்த கோரச்சம்பவம் நடந்ததாகவும் தெரிகிறது. இந்த நைட்ரேட் வாயு, தங்கச் சுரங்கங்களில் பாறை மற்றும் மண்ணிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது.