வர்த்தகத்திற்கு அடுத்தபடியாக ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நிய செலாவணியை பெருக்கக் கூடியது சுற்றுலாத் துறை. கரோனா காலத்தில் பெரும் அடியை சந்தித்த சுற்றுலாத் துறை தற்போது புத்துயிர் பெற்று வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது.
தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை அடுத்த மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் மெக்சிகோவில் நடைபெற்ற சுற்றுலா கண்காட்சியில் தமிழக சுற்றுலாத்துறை குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட ராட்சத பயர் பலூன்கள் பறக்க விடப்பட்டன.
இதைத் தொடர்ந்து லண்டனில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா சந்தை கண்காட்சியில், தமிழ்நாடு சுற்றுலா அரங்கு அமைக்கப்பட்டது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அரங்கினை திறந்து வைத்தார். தமிழகத்தின் பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை உலக மக்களுக்கு பறைசாற்றும் வகையில் கலைநய பொருட்கள், வரலாற்றுக் கல்வெட்டுகள், பண்டைய கால அரண்மனை வடிவங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லந்து நகரங்களில் தமிழக சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் வகையிலான வீதிக் காட்சிகள் நடத்தப்பட்டன. மேலும் சுற்றுலாத் துறை, லண்டன் தமிழ் சங்கம், ஸ்காட்லாந்து வாழ் தமிழர்கள் மூலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்கவர் நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை அரங்கேற்றப்பட்டன.
இதையும் படிங்க:தாக்குதல் நடத்த ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியதாக என்.ஐ.ஏ தகவல்!