டெல்லி:அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான சச்சரவுகள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவை தடைசெய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரனை இன்று நடந்தது.
இம்மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதாடினார். அப்போது கூறிய அவர்,"ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததால் தான் தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூற்று
- கட்சியின் பொதுக்குழு நடத்துவதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தெளிவாகக் கூறியுள்ளார்.
- அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. பொதுக்குழுவை நடத்த நீதிமன்றம் வழிகாட்ட முடியாது.
- நட்போ சண்டையோ உங்களுக்குள் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் விவாதிக்காமல் பொதுக்குழுவில் விவாதியுங்கள்.
- தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் நீதிமன்ற அவமதிப்பு என்ன இருக்கிறது.
- ஈபிஎஸ்கு எதிரான அவமதிப்பு வழக்கில் தலையிட மறுப்பு.
- கட்சி விதிமுறைகளுக்கு எதிராக யாரேனும் நடந்தால் அதில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்?
- ஜூலை பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்?
இந்நிலையில், வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஓபிஎஸ் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:நுபுர் ஷர்மா 'தலையை துண்டிக்க பரிசு' அறிவித்த மதகுரு கைது