வாஷிங்டன்:உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடிமருந்துகளை வழங்குவது குறித்த கடினமான முடிவை, சர்ச்சைக்குரிய வெடிகுண்டுகளை கவனமாகப் பயன்படுத்துவதாக உக்ரைன் உறுதியளித்ததை தொடர்ந்தே எடுத்ததாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
லித்துவேனியா நாட்டில் விரைவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்கா இந்த கடின முடிவை எடுத்து உள்ளது. இத்தகைய வெடிமருந்துகளால், இதற்குமுன் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில், நேட்டோவில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ள நிலையில், இத்தகைய கொடூர ஆயுதங்களை, ஏன் உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்ற கேள்வியை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
தற்போது, உக்ரைன் நாட்டின் கைவசம் வெடிமருந்துகள் எதுவும் இல்லை என்றும், எல்லைப்பகுதிகளில் முன்னேறி வரும் ரஷ்ய நாட்டின் பீரங்கி டாங்குகளை, தற்காலிகமாக நிறுத்துவதற்கு, உக்ரைனிற்கு, இந்த கிளஸ்டர் குண்டுகள் துணைபுரியும் என்று, சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டு உள்ளார்.
ஜோ பைடனின் இந்த நடவடிக்கைக்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்து உள்ளார். "சரியான நேரத்தில், பரந்த மற்றும் மிகவும் தேவையான பாதுகாப்பு உதவிக்கு" பைடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இது "சர்வாதிகாரத்திற்கு எதிரான வெற்றிக்கு ஜனநாயகத்தை கொண்டு வரும்" என்று, ட்விட்டர் பதிவில் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியதாவது, , "டட் ரேட்" எனப்படும் வீரியம் குறைக்கப்பட்ட வெடிமருந்துகளையே அமெரிக்கா, உக்ரைனுக்கு அனுப்ப உள்ளது.ஆனால், எத்தனை எண்ணிக்கையில் இத்தகைய வெடிமருந்துகள் வழங்குவது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
ரஷ்ய படையினர் மற்றும் அவர்களின் டாங்கிகள் தொடர்ந்து முன்னேறி உக்ரேனிய நிலப்பரப்பைக் கைப்பற்றி வருகின்றன. இதன்காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், இந்த கடின முடிவை, தாங்கள் எடுத்ததாக, சல்லிவன் தெரிவித்து உள்ளார்.
ஆனால் வெள்ளிக்கிழமை "இதுபோன்ற வெடிமருந்துகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், எந்த இடத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதி மார்டா ஹுர்டாடோ குறிப்பிட்டு உள்ளார்.