லண்டன்:இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (செப் 19) காலை 6.30 மணிக்கு ராணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிவுக்கு வருகிறது. அதன்பின் இறுதி சடங்குகள் தொடங்குகின்றன. காலை 8 மணிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். காலை 10:44 மணிக்கு எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.
அப்போது மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியமம், ஹாரி உள்ளிட்ட மூத்த அரசு குடும்பத்தினர் உடன் செல்கிறார்கள். அப்போது ராயல் நேவி மற்றும் ராயல் மரைன்ஸ் இசைக்குழுவின் அணி வகுப்பு நடக்கிறது. அதன்பின் 11 மணி அளவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் 2,000 உலகத் தலைவர்கள் மௌன அஞ்சலி செலுத்துவர். அதைத்தொடர்ந்து 11:55 மணியளவில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து நாட்டு மக்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவர். அதன்பின் 11:55 மணியளவில் தேசிய கீதம் மற்றும் குயின்ஸ் பைபர் இசைக்கும் நிகழ்வுகள் நடக்கும்.
அதைத்தொடர்ந்து 12:15 மணியளவில் அபேயில் இருந்து வெலிங்டன் ஆர்ச் வரை மகாராணியின் சவப்பெட்டி ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். அப்போது ராணுவ வீர்ரகள், போலீசார் அணிவகுப்பு நடக்கும். அந்த நேரத்தில் பொதுமக்கள் ஊர்வலத்தை காணலாம். அதன்பின் 3:00 மணியளவில் வெலிங்டன் ஆர்சில் இருந்து வின்ட்சர் கோட்டையின் லாங் வாக் வரை ஊர்வலம் செல்லும்.