பேங்காக்: கடந்த சில நாட்களாக தெற்கு தாய்லாந்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கப்பல்கள் கரையிலேயே இருக்கும்படி அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தாய்லாந்து வளைகுடாவில் ஹெச்டிஎம்எஸ் சுகோதாய் கோர்வெட் (HTMS Sukhothai corvette) என்ற கடற்படையைச் சேர்ந்த கப்பல், நேற்று (டிச.18) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அப்போது பலத்த காற்று வீசி, 10 அடி உயரத்துக்கும் மேலாக அலைகள் எழுந்துள்ளன. இதனால் நிலைதடுமாறிய ரோந்து கப்பல், கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அப்போது கப்பலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பலில் பயணித்தவர்கள் கடலில் தத்தளிக்கத் தொடங்கினர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், கப்பலில் பயணித்தவர்களை தேடி வருகின்றனர்.