வாஷிங்டன்:ஒரு பெண், நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் மீது நிறவெறி தாக்குதல் மேற்கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. மீண்டும் இந்தியாவுக்கே திரும்பும்படி அந்த வீடியோவில் அமெரிக்க பெண் அராஜகமான முறையில் பேசியிருந்தார்.
'இந்தியர்களை வெறுக்கிறேன்...': வீடியோவில் பதிவான சம்பவம், டெகசாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் ஒரு பார்கிங் பகுதியில் நேற்று முன்தினம் (ஆக. 24) இரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், அராஜாகமான முறையில் நடந்துகொண்ட பெண் மெக்ஸிகன்-அமெரிக்கன் என தெரியவந்தது. அந்த பெண்மணி, பலானோ பகுதியைச் சேர்ந்த எஸ்மரால்டா உப்டான் என்பவர் என அடையாளம் போலீசாரால் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பலானோ போலீசார் நிறவெறி தாக்குதல் மேற்கொண்ட மெக்ஸிகன் - அமெரிக்கன் பெண்ணை கைது செய்து, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. வைரலான அந்த தாக்குதல் வீடியோவில் அந்த மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண்மணி,"இந்தியர்களாகிய உங்களை நான் வெறுக்கிறேன். சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் அமெரிக்கா வருகின்றனர்" என ஆதங்கமாக கூறிய அவர், அடிக்கடி ஆபாச வார்த்தையையும் அதில் பயன்படுத்தியுள்ளார்.
எங்கும்... எப்போதும்... இந்தியர்கள்: தொடர்ந்து அந்த வீடியோவில்,"நான் எங்கே போனாலும், அங்கு இந்தியர்கள் இருக்கிறார்கள்... இந்தியா வாழ்வதற்கு நன்றாக இருந்தால், ஏன் இங்கு வருகிறீர்கள்?" என சத்தமான குரலில் மீண்டும். மீண்டும் ஆபாச சொற்களை அந்த பெண்மணி பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, சத்தம் போட்டு நிறவெறி கருத்துகளை கத்தியபடியே, அந்த நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டார்.