வர்ஜினீயா (அமெரிக்கா): இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நியூயார்க் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 23) சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வடக்கு அமெரிக்கவின் தெலுங்கு சங்கம் (TANA) ஏற்பாடு செய்த நிகழ்வு வர்ஜினீயாவில் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. அதில், தலைமை நீதிபதி என்வி ரமணா பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தெலுங்கு மக்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அமெரிக்காவில் 7 லட்சம் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கின்றனர். இந்திய கலாசாரத்திற்கும், சடங்குகளுக்கும் நீங்கள் கொடுக்க முக்கியத்துவத்தை பார்க்கும்போது, தெலுங்கு தேசத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நிறைவு ஏற்படுகிறது.
வீட்டில் தெலுங்கு பேசுங்கள்: நமது தாய் மண்ணை எப்போதும் மறக்கக் கூடாது, எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தெலுங்கு வெறும் மொழி மட்டுமல்ல, அது நமது வாழ்க்கை முறை. அந்நிய மொழிகளை மதிக்க வேண்டும். அதேபோல், உங்களது வீட்டில் தெலுங்கு மொழியிலே பேச வேண்டும்.
நான் தெலுங்கில்தான் படித்தேன்: நாம் தெலுங்கு மொழிக்காக போராட வேண்டிய சூழலில் இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. தாய்மொழியில் படித்தால் வேலை கிடைக்காது என்பது கட்டுக்கதை. நான் தெலுங்கில் படித்தே இந்த நிலைக்கு வந்துள்ளேன். 2010-2017 ஆண்டுகளில் அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை 85 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவர்கள் தனது தாய்மண்ணிற்கும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.
ஏற்றத்தாழ்வுகளை ஏற்காதீர்கள்: அமெரிக்காவில் குடிபெயர்ந்தவுடன் பொருளாதாரத்தில் வலுபெற்று இருப்பீர்கள். எனவே, சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் நீங்கள் பெரும் பங்காற்ற வேண்டும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், சமூகத்தில் அரஜாகப்போக்கு நிலவினால் உங்களால் நிம்மதியாக வாழ முடியாது.