கைபர் பக்துன்குவா:பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பேசாவர் பிரிவில் உள்ளது, கைபர் மாவட்டம். இங்கு உள்ள அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்று கட்டப்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில், இந்த மசூதியில் நேற்று (ஜூலை 25) குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவத்தில் அத்னான் அஃப்ரிடி என்ற கூடுதல் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இது தொடர்பாக அம்மாவட்ட காவல் துறை தரப்பில் கூறுகையில், “காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் ஒரு தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில் உயிரிழந்த கூடுதல் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அத்னான் அஃப்ரிடி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதில் காயம் அடைந்த நபர்கள் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, ஜம்ருத் அருகே கட்டுமானப் பணியில் இருந்த மசூதியில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கைபர் மாவட்ட காவல் துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், கைபர் மாவட்ட காவல் துறை உளவு பார்ப்பதற்காக மசூதிக்குள் வந்து உள்ளது. அப்போது, சந்தேகத்திற்கு இடமான இருவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து உள்ளனர். அப்போது, அதில் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்து உள்ளார்.
அதேநேரம், மற்றொருவர் தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி உள்ளார். இருப்பினும், தப்பி ஓட முயன்ற மற்றொரு நபரை காவல் துறையினர் பிடித்து உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை உள்ளூர் ஊடகங்கள் உறுதி செய்து உள்ளன. மேலும், கைபர் பக்துன்குவா பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.