வாஷிங்டன்: வாயில் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவால் மூளையில் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளைமவுத் பல்கலைக்கழகம் மற்றும் பிளைமவுத் என்ஹெச்எஸ் அறக்கட்டளையின் மருத்துவமனைகள் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. டென்டிஸ்ட்ரி என்ற மருத்துவ பத்திரிகையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், வாய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கும், மூளையில் ஏற்படும் கட்டி, புண் போன்ற பாதிப்புகளும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். வாய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மிகவும் அசாதாரணமான ஒன்றுதான். ஆனால், இது இறப்புகளை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 87 நோயாளிகளின் தரவுகளை ஆய்வு செய்தனர். இவர்களுக்கு மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்திய பாக்டீரியாக்கள் குறித்தும், புறக்காரணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான புறக்காரணிகள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆனால், பெரும்பாலான நோயாளிகளுக்கு வாய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் தாக்கம் இருப்பது தெரியவந்தது. இந்த நோயாளிகளிடம் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆஞ்சினோசஸ் என்ற பாக்டீரியா அதிகளவு இருந்தது. இது மூளை, நுரையீரல், கல்லீரல் போன்ற உள் உறுப்புகளில் நோய்த்தொற்று ஏற்பட வழிவகுக்கும். இந்த பாக்டீரியா பெரும்பாலும் பற்சொத்தை உள்ளிட்ட வாய்த்தொற்றுகளில் காணப்படும். பற்கள் அல்லது வாயில் ஏற்படும் தொற்றுகள், மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.