கொழும்பு:இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக புகுந்து மாளிகையை கைப்பற்றினர்.
அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகள், கேரம் போர்டு விளையாடுவது, சோபாவில் படுத்து உறங்குவது, பிரம்மாண்ட பாத்திரத்தில் இரவு உணவு தயாரிப்பது போன்ற காட்சிகளும் வெளியானது. மக்கள் ஒன்று திரண்டு வந்ததால், அதிபர் கோத்தபய மாளிகையை காலி செய்துவிட்டு தப்பி ஓடினார்.
மேலும், அதிபர் ராஜபக்சேவின் சகோதரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே நாட்டில் இருந்து வெளியேற இருந்தபோது, கொழும்பு விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் நேற்று நள்ளிரவு (ஜூலை 12) தடுத்து நிறுத்தப்பட்டார்.
கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ஜூலை 13ஆம் தேதி அன்று ராஜினாமா செய்வதாக முன்னர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ராஜினாமா கடிதத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 12) அவர் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய பின்னர், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று (ஜூலை 13) இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாக குடியேற்ற அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.