சியோல் :தென் கொரியாவில் நாய் கறி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் சட்டவிரோதமாக நாய் கறி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 2 முதல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வழி வகை செய்கிறது.
விரைவில் நாடாளுமன்ற கேபினட் கவுன்சில் மற்றும் அதிபர் யூன் சுக் யோலின் ஒப்புதலை பெற்ற பின் மசோதா சட்டமாக இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கரம் நீட்டப்பட்டு வருகிறதோ அந்த அளவுக்கு எதிர்ப்பு குரல்களும் எதிரொலித்து வருகின்றன.
நாய் கறி என்பது கொரிய தீபகற்பத்தில் நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கும் ஒரு நிகழ்வாக காணப்படுகிறது. இருப்பினும் நாய் கறியை நுகர்வு மற்றும் உணவு பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு அண்மைக் காலமாக தென் கொரியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பல்வேறு தரப்பினரும் நாய் கறி நுகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.