பிலடெல்பியா :அமெரிக்காவில் ஜூன்டீன்த் தின கொண்டாட்டத்தின் போது தேவாலயம் முன் கண்மூடித்தன துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடிமைப்படுத்தப்பட்டு இருந்த அமெரிக்க ஆப்பிரிக்க மக்களின் விடுதலையை குறிக்கும் நாளாக அமெரிக்காவில் ஜூன்டின்த் தினம் கொண்டாடப்படுகிறது. அடிமைத்தன ஒழிப்பை குறிக்கும் தினமான ஜூன்டின்த்தை பொது விடுமுறையாக ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் ஜூன்டின்த் தினம் கொண்டாடப்பட்டது. மில்வாக்கி நகரில் உள்ள பிலடெல்பியா தேவாலயத்தின் முன் பொது மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். குதூகல மகிழ்ச்சியில் திளைத்த சிறுமிகளிடம், இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 சிறுமிகள் மற்றும் 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த சுற்றுவளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விழா கொண்டாட்டத்தின் போது பேஸ்புக் நேரலை போடப்பட்டதால், அதில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரின் முகம் பதிவாகி இருந்த நிலையில், அடையாளம் காணப்பட்டு அதை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் நடந்ததில், என்ன காரணத்திற்காக இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரியவராத நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் 14 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர். சிறுவர், சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழல் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க சரியான சட்டம் இல்லாததே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம் என பொது மக்கள் கூறுகின்றனர். அதேநேரம் நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தடுக்க போதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
அமெரிக்க அதிபர் பைடனும், தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார். துப்பாக்கிச் சூடு கலாசாரத்தை கட்டுப்படுத்த போதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுபாட்டு சட்டத்தை நடமுறைப்படுத்த அவர் கோரி உள்ளார்.
இதையும் படிங்க :Modi US visit: பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு! இந்தியாவில் டெஸ்லா கிளை?