ஜூபா:ஆப்பிரிக்காவின் சூடானில் இருந்து பிரிந்து 2011ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற தெற்கு சூடானில், சல்வா கீர் அதிபராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2022, டிச.13 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்த அதிபர் சல்வா கீர், தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த காட்சிகள் தெற்கு சூடான் ஒலிபரப்பு கார்ப்பரேஷனால் (SSBC) வீடியோவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்த ஊடகத்திலும் ஒளிபரப்பு செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக, அதிபர் சல்வா கீர் சிறுநீர் கழித்த வீடியோ இணைய தளங்களில் வைரலானது. இதனையடுத்து எஸ்எஸ்பிசியின் ஊழியர்களான ஜேக்கப் பெஞ்சமின், முஸ்தபா ஓஸ்மான், விக்டர் லடோ, ஜோவல் டோம்பே, செர்பெக் ரூபன் மற்றும் ஜோசப் ஆலிவர் ஆகிய 6 பேரை தேசிய பாதுகாப்பு சேவையினர் கைது செய்துள்ளனர்.