நியூயார்க்: கடந்த வியாழக்கிழமை (அக்.19) நியூயார்க் நகரில் வசித்துவரும் சீக்கியரான ஜஸ்மர் சிங் (66) என்பவரது காரும் கில்பர்ட் அகஸ்டின் (30) என்பவரது காரும் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸில் என்ற பகுதியில் சிறு விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தால் ஜஸ்மர் சிங் ஓட்டிவந்த காரில் கீறல்கள் ஏற்பட்டதன் காரணமாக ஜஸ்மர் சிங்கிற்கும் கில்பர்ட் அகஸ்டினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜஸ்மர் சிங் இதுகுறித்து புகார் அளிப்பதற்காகத் தனது தொலைப்பேசி மூலமாகப் போலீசுக்கு (911) அழைப்பு விடுத்துள்ளார். உடனே அவரது தொலைப்பேசியை கில்பர்ட் அகஸ்டின் பறித்துள்ளார்.
இதனை அடுத்து அகஸ்டினிடம் இருந்து தனது தொலைப்பேசியை வாங்கிக்கொண்டு தனது காரின் அருகே சென்றுள்ளார் ஜஸ்மர் சிங். அப்போது கோபமடைந்த கில்பர்ட் அகஸ்டின் ஜஸ்மர் சிங்கின் தலையில் பலமாக மூன்று முறை குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.
பின்னர் கில்பர்ட் அகஸ்டின் பயத்தில் தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் ஜஸ்மர் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு மூளையில் பலமாக அடிபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜஸ்மர் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒரு சிறிய கார் விபத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தாக்கப்பட்டதில் 66 வயதான சீக்கியர் ஜஸ்மர் சிங் தலையில் காயங்களுடன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ஒரு வாரத்திற்குள் சீக்கியர் மீது நியூயார்க்கில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அந்த வகையில் கடந்த வாரம், ரிச்மண்ட் ஹில்லில் பேருந்தில் சென்று கொண்டிருந்த 19 வயதுடைய சீக்கிய இளைஞரிடம் அவர் தலையில் கட்டியிருந்த டர்பனை அகற்றக் கூறியும் இந்த நாட்டில் நாங்கள் அதை அணிய மாட்டோம் என்று கூறியும் கிறிஸ்டோபர் பிலிப்பெக்ஸ் என்பவர் இளைஞனின் தலையின் பின்புறத்தில் 26 முறை குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 19 வயதுடைய சீக்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தனது 'X' வலைத்தளத்தில் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "ஜஸ்மர் சிங் தாக்கப்பட்டதற்கும் மற்றும் அவரது துயர மரணத்திற்கும் அனைத்து நியூயார்க் மக்களின் சார்பாக எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஒரு அப்பாவி உயிரைப் பறித்த வெறுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் உங்களைப் பாதுகாப்போம், எங்கள் குழு இந்த வாரம் சீக்கிய தலைவர்களைச் சந்திக்கும்" என்று எரிக் ஆடம்ஸ் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ஜஸ்மர் சிங்கை தாக்கிவிட்டுத் தப்பித்துச் சென்ற கில்பர்ட் அகஸ்டினை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: ஆபரேஷன் அஜய் திட்டத்தில் மேலும் 143 இந்தியர்கள் மீட்பு!