கான்பெரா:ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு வடக்கே நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் (Hunter Valley) ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதி அருகே 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் திரும்பியுள்ளது. அப்போது, அந்த பேருந்து ஹண்டர் பகுதியை நெருங்கும்போது நிலைத் தடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து பேரிடர் மீட்புப்படை மற்றும் அந்நாட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளமான பகுதி என்பதால் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு ஹெலிக்காப்டர்கள் வரவழைக்கப்பட்டு மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து அவசர உதவி தேவைப்படும் நபர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஹெலிக்காப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பலர் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், 22 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 58 வயதான பேருந்து ஓட்டுநர் விபத்து குறித்து சரியான விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேருந்து விபத்தானது அதிக வேகம் காரணமாக நடந்ததா? இல்லை பனி மூட்டம் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர், அந்தோனி அல்பானீஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில், "விபத்து நடைபெற்றதை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்த நபருக்கு நன்றி, இன்றைய விடியலை ஆஸ்திரேலிய மக்கள் சோகத்துடன் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்து குறித்து பேசியுள்ள செஸ்நோக் மெயர் ஜய் சுவால், "ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதி சுற்றுலா மற்றும் திருமண நிகழ்வுகளில் மக்களை ஈர்க்கும் ஒரு முக்கியமான பகுதி என தெரிவித்தார். ஆனால் இந்த விபத்தின் காரணமாக மக்கள் இனி இந்த பகுதிக்கு வருவதை நினைத்து அச்சம் அடையும் நிலை உருவாகி உள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:தேனிலவுக்காக இந்தோனேசியா சென்ற புதுமண தம்பதி..கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்