சிகாகோ:அமெரிக்காவிற்கும் ஆசியவிற்கும் இடையே பசிபிக் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள ஹவாய் தீவில் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி ஒரு பெரும் வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது. இந்த தீவில் உள்ள பேர்ல் ஹார்பர் 2 மணி நேரத்திற்குள் குண்டுகளாலும், மரண ஓலங்களாலும் நிறைந்தது. ஜப்பானிய போர் விமானங்களின் திடீர் தாக்குதலில், அமெரிக்க கடற்படையின் 5 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 16 கப்பல்கள் சேதமடைந்தன. 188 விமானங்கள் அழிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவ வீரர்கள், மாலுமிகள், பொதுமக்கள் உள்பட 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின்போது மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள் 2 ஆண்டுகளுக்கு பின் வெளியே எடுக்கப்பட்டன. அதில் 300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் மாலுமிகளின் எச்சங்கள் கிடைத்தன. அவற்றில் பெரும்பாலானவை அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தால் அனைத்தும் ஓக்லஹோமாவில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டன. அதன்பின் 2003ஆம் ஆண்டு பல் பதிவுகளை வைத்து அடையாளம் காண மீண்டும் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அப்போது பலரது அடையாளங்கள் காணப்பட்டு, அவர்களது சந்ததியினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும் 100 செட் பல் பதிவுகள் அப்போதைய தொழில்நுட்பத்தை வைத்து அடையாளம் காணமுடியாத நிலையில் இருந்தன. அதன்பின் 2015ஆம் ஆண்டு அந்த பல் பதிவுகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்தது. இந்த ஒவ்வொரு ஆய்வின்போதும் பேர்ல் ஹார்பரில் தங்களது முன்னோர்களை பறிகொடுத்த சந்ததியினர் அவர்களின் எச்சங்களுக்காகவும், இறுதி மரியாதை செய்வதற்காகவும் காத்திருந்தனர்.