கீவ் :வடக்கு அட்லாண்ட் ஒப்பந்த அமைப்பான நேட்டோ படையில் சேர விருப்பம் உள்ளிட்ட காரணங்களால் உக்ரைன் மீது அதிருப்தி கொண்ட ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அந்நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. ராணுவ நடவடிக்கை தொடங்கி ஓராண்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், போர் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரஷ்ய ராணுவத்தினர் வீசிய குண்டு மழை உக்ரைனின் உள்கட்டமைப்புகளை உருக்குலைத்தன. மேலும் அப்பாவி மக்கள் பலர் இந்த ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டனர். உக்ரைனில் உள்ள பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகளை ரஷ்ய வீரர்கள் தேடித் தேடி அழித்ததாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீதும் அந்நாட்டு அதிபர் புதின், ரஷ்ய நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீதும் விதித்தன. மறுபுறம் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள், நேரிடியாகவோ, மறைமுகமாகவோ உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.
ரஷ்யாவின் போரால், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் சொந்த வீடுகளை இழந்து அகதிகளாக உள்நாட்டிலும், அண்டை நாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதை உதாசீனப்பட்டுத்தும் வகையில் தொடர் ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.
உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்யா போர்க் குற்றம் புரிவதாகவும், அந்நாட்டு குழந்தைகளை விருப்பமின்றியும் அத்துமீடறியும் ரஷ்யாவுக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் ரஷ்ய அதிபர் புதின் உள்பட இருவருக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.