கீவ்:ரஷ்ய-உக்ரைன் போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. இருநாட்டிலும் ராணுவ வீரர்கள், பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் அதிகப்படியான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று (ஜன.26) உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் பெரும்பாலும் உக்ரைனின் தலைநகரான கீவ் பாதிக்கப்பட்டுள்ளது.
35 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலால் உக்ரைனின் 11 பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. தாக்குதல் நடந்த இடம் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேவையான மின்சாரம், 88 ஜெனரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு துணை செய்தித் தொடர்பாளர் தரப்பில், “உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலை நீங்கள் பார்த்தீர்கள். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சிறிய நாடான உக்ரைனுக்கு, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் நவீன டாங்கிகளை வழங்குவதாக அறிவித்தன. இதற்கு ரஷ்யா தரப்பில், ‘ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு டாங்கிகள் வழங்குவதன் மூலம், அவைகள் நேரடியாக போரில் பங்கேற்பதாக அர்த்தம்’ என தெரிவித்தது. இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Usain Bolt: உசேன் போல்ட் வங்கி கணக்கில் இருந்து ரூ.103 கோடி திருட்டு!