கீவ் (உக்ரைன்): ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போரின் பரபரப்பு, சற்று தணிந்து தற்போது ஓரளவு அமைதிக்கு திரும்பி உள்ள நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 02) அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 12 நாட்களில் நடைபெற்ற முதல் தாக்குதல் இதுவாகும்.
கீவ் நகர நிர்வாகத் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்து உள்ளதாவது, ஈரான் நாட்டு தயாரிப்பான வெடிக்கும் வகையிலான ஷாஹத் ட்ரோன்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டன. கீவ் நகரத்தைத் தவிர, அதன் புறநகர் பகுதிகளும் குறிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தின் பாகங்கள் விழுந்து ஒருவர் காயமடைந்ததாக கீவ் மாகாண ஆளுநர் ருஸ்லான் கிராவ்சென்கோ தெரிவித்து உள்ளார்.
உக்ரைன் நகரத்தைத் தாக்கிய ட்ரோன்களின் சரியான எண்ணிக்கை வழங்கப்படவில்லை. ஆனால், உக்ரைனின் விமானப்படை, நாடு முழுவதும், எட்டு ஷாஹெட்ஸ் மற்றும் மூன்று கலிபர் ஏவுகணைகள், ரஷ்யப் படைகளால் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைனின் தெற்கு கெர்சன் மாகாணத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 13 வயது சிறுவன் காயமடைந்ததாக, அம்மாகாணத்தின், உக்ரேனிய நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் டோலோகோனிகோவ் கூறி உள்ளார்.
கெர்ஷன் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர். ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் மாகாணத்தில் இயங்கும் ரஷ்ய துருப்புக்களால் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்று குறிவைக்கப்பட்டதாக, அப்பகுதி வழக்குரைஞர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி அளித்து வருகிறது. டொனெட்ஸ்க் மாகாணத்தில உள்ள பாக்முத், மரிங்கா, லிமான் உள்ளிட்ட பகுதிகளில், 46 முறை, இருதரப்பும் கடுமையாக மோதிக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாக்முத் நகரத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் "பெரிய தாக்குதலுக்கு" மத்தியில் உக்ரைனியப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக, உக்ரைனின் கிழக்குப் படைகளின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி செரெவதி, உக்ரைன் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.