தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Putin: ரஷ்ய அதிபர் புதின் மீது கொலை முயற்சி - உக்ரைன் மீது கிரம்ளின் குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் புதினை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொல்ல முயன்றதாக உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் குற்றஞ்சாட்டி உள்ளது.

Putin
Putin

By

Published : May 3, 2023, 8:17 PM IST

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாகவும், அதிபர் மாளிகை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் தெரிவித்து உள்ளது.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோ படையில் சேர விருப்பம் உள்ளிட்ட காரணங்களால் உக்ரைன் மீது அதிருப்தி கொண்ட ரஷ்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அந்நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஏறத்தாழ 400 நாட்களை தாண்டி ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது.

பல்வேறு நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் வீசிய குண்டு மழை உக்ரைனின் உள்கட்டமைப்புகளை உருக்குலைத்து வருகிறது. மேலும் அப்பாவி மக்கள், பலர் இந்த ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். மேலும் சிலர் குண்டு மழைக்கு நடுவே தங்களது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகளை ரஷ்ய வீரர்கள் தேடித் தேடி அழித்ததாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீதும் அந்நாட்டு அதிபர் புதின், ரஷ்ய நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீதும் விதித்தன. மறுபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே உக்ரைன் மீதும் ரஷ்யா பல்வேறு புகார்களை தெரிவித்து வந்தஜதுஜ. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மீது கொலை முயற்சி நடந்ததாகவும், உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி அதிபர் புதினை கொல்ல திட்டமிட்டதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் தெரிவித்து உள்ளது.

கிரம்ளின் மீது உக்ரைன் அனுப்பிய இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்த இருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு படை வீரர்கள் அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான கிரம்ளின் குவிமாட்த்தில் தீ பற்றி எரியும் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த தாக்குதல் நடந்த போது அதிபர் மாளிகையில் அதிபர் புதின் இல்லை என்றும், Novo-Ogaryovoவில் இருந்த மற்றொரு மாளிகையில் இருந்ததாகவும் கிரம்ளின் தெரிவித்து உள்ளது. தகுந்த நேரத்தில் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதால் பெரிய அளவிலான பொருள் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கிரம்ளின் தெரிவித்து உள்ளது.

அதேநேரம் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டிற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "கிரம்ளின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஏனெனில் இந்த தாக்குதல் எந்த ராணுவ நோக்கத்தையும் தீர்க்காது" என்று தெரிவித்தார்.

மே 9 ஆம் தேதி ரஷ்ய அதிபர் மாளிகையில் வெற்றி நாள் அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அதிபர் புதினை கொல்ல உக்ரைன் திட்டமிட்டு உள்ளதாக கிரம்ளின் செய்தி தொடர்பாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதையும் படிங்க :மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் மும்பை டப்பாவாலாக்கள் - எதுக்கு போறாங்க தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details