வாஷிங்டன்:அமெரிக்காவில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடத்தப்படுகிறது. அதிபர் தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும். செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அம்சங்களை கொண்டது அமெரிக்க நாடாளுமன்றம்.
அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், மிட் டெர்ம் எனப்படும் இடைக்கால தேர்தல் இம்மாதத்தில் நடைபெற்றது. 435 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 35 செனட் சபை உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற 218 இடங்கள் வேண்டிய நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி எளிதில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது. பொருளாதார மந்தநிலை, அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், உக்ரைன் - ரஷ்யா போரில் அதிபர் பைடனின் நிலையில் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் முடிவில் பெரும் மாற்றம் வரும் என கணிக்கப்பட்டது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வாக்குப்பதிவில் எதிரொலித்தன. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், 218 இடங்களில் பெரும்பான்மை பெற்று குடியரசுக் கட்சி ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துவிட்டன.