கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அண்மையில் அதிபர் மாளிகையும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. இதனிடையே, கோத்தபாய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறினார். அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசநாயக்க மூவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இலங்கை நாடாளுமன்றம் நேற்று (ஜூலை 20) காலை 10 மணிக்கு கூடியது. மொத்தம் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிபராக 113 பேரின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 21) இலங்கையின் 9ஆவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் தேர்வான அதிபர்கள் மக்களால் நேரடியாக தேர்வானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு