லண்டன்: ரத்த அணுக்கள் சார்ந்த அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். உலகிலேயே முதல்முறையாக ஆய்வகத்தில் ரத்த சிவப்பணுக்களை தயாரித்துள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்துள்ளனர்.
தற்போது இந்த ரத்த சிவப்பணுக்களை மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்களை இரண்டு தன்னார்வலர்களுக்கு செலுத்தியுள்ளனர்.
சாதாரண மக்களிடமிருந்து பெறப்படும் ரத்த சிப்பணுக்களுடன் ஒப்பிடும்போது, ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட சிவப்பணுக்கள் நீண்ட காலம் உயிர்வாழும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதற்கு காரணம், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தத்திலும் வயதான செல்களும், இறந்த செல்களும் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
அதனால், அடிக்கடி ரத்தம் செலுத்த வேண்டிய அரிதான நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரத்த அணுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கேன்சர் பரவலில் முக்கியப்பங்காற்றும் செல்களின் திரவம்!