குயிட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டில், ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 8 அதிபர் வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அங்கு அதிபர் தேர்தல் இறுதிகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் தலைநகர் குயிட்டோவில், Build Ecuador Movement கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக களம் கண்டு உள்ள பெர்னாண்டோ விலாவிசென்சியோ, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்து விட்டு, தனது பிரசார வாகனத்தில் நுழைய முயன்ற போது, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெர்னாண்டோ விலாவிசென்சியோ உயிரிழந்தார். அந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈக்வடார் நாட்டில், சமீபகாலமாக போதைப் பொருள் கடத்தல், கூட்டு வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்டவைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக, அதிபர் குயிலேர்மோ லாசோ மீதான அரசின் மீது களங்கம் ஏற்பட்டு உள்ளது. எதிர்கட்சிகளும், தொடர்ந்து லாசோ அரசின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நிலையில், தன் அரசு மீதான களங்கம் மற்றும் குற்றச்சாட்டுகளை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டதாக, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, பெர்னாண்டோ விலாவிசென்சியோ, 2007 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிபர் பொறுப்பு வகித்த ரபேல் கோரியா அரசின் ஊழலை வெளிக்கொணர்ந்ததில் முக்கிய பங்காற்றி உள்ளார். அந்த அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள் மற்றும் அதிகார்கள் மீது வழக்கு தொடர்ந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.