சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று (ஜூன் 20) தொழில்நுட்பத் தலைவர்கள் குழுக்களுடன் செயற்கை நுண்ணறிவின் சாதக, பாதகங்களை கலந்துரையாடினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடைய நிர்வாகக் குழு வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை நெறிமுறைப்படுத்த வழிகளையும், அதனைப் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
தொழில்நுட்ப வல்லுநர்களுடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘நாம் அதிக தொழில்நுட்ப மாற்றங்களை அடுத்த 10 ஆண்டுகளில் காண்போம். ஏற்கனவே அந்த மாற்றங்களில் பயணிக்க தொடங்கிவிட்டோம். செயற்கை நுண்ணறிவு சாட் ஜிபிடியின் (Chat GPT) இந்த திடீர் வளர்ச்சி மனிதர்கள் போல எழுதுதல், பாடுதல், வரைதல், மற்றும் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் கோடிங் ஆகியவற்றை செய்ய உதவுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவுகிறது. ஆனால், இதில் பல்வேறு அபாயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம், தொழிலாளர்களின் ஆட்குறைப்புக்கு வழிவகுக்கும். ஏற்கனவே ஐரோப்பா யூனியனில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை குறைப்பதற்கான நெறிமுறைகளை கண்டறித்து வருவதாக கூறுகின்றனர்” என்றார்.
கடந்த மே மாதத்தில் பைடன் நிர்வாகம் அனைத்து தொழில்நுட்ப தலைவர்களையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து செயற்கை நுண்ணறிவின் சாதக பாதகங்களை கலந்துரையாடினார். வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவர் ஜெஃப் ஜியண்ட்ஸ் என்பவர் செயற்கை நுண்ணரிவை கையாள்வது குறித்து ஆலோசித்து வருகிறார். முக்கிய அதிகாரிகள் இந்த செயற்கை நுண்ணறிவு குறித்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆலோசித்து வருகின்றனர்.