ஹிரோஷிமா: இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி7 அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஹிரோஷிமா நகரில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் இன்று அவர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த பூங்காவில், இந்திய பிரதமர் மோடி மட்டுமல்லாது, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட மற்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர். அருங்காட்சியகத்திற்கு மோடி சென்ற போட்டோக்களை வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்து உள்ளார். மேலும் நினைவகத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி ஹிரோஷிமா பூங்காவிற்கு பிற நாட்டுத் தலைவர்களுடன் சென்று பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட படத்தை பகிர்ந்துள்ள ANI செய்தி நிறுவனம், பிரதமர் மோடி மறுசுழற்சி முறையில் உருவாக்கப்பட்ட ஆடையை அணிந்திருப்பதாக தெரிவித்திருந்தது. பிரதமர் மோடி தான் அணியும் ஆடைகளில் தனிக் கவனம் செலுத்துபவர்.
தான் செல்லும் இடம், அங்குள்ள மக்களின் பாரம்பரிய, நாட்டின் கலாசாரம் ஆகியவைகளைப் பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அவர் அணிவார். மேலும் நவநாகரிக உடைகளையும் அவர் அணிவது வழக்கம். அவர் அணியும் உடைகளுக்கு ஆகும் செலவு அவ்வப்போது சர்ச்சையைக் கிளப்புவதும் உண்டு. ஆனால், அவர் அணியும் ஆடைகள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் அந்த ஆடையின் விலையை விட அதிக தொகை ஈட்டப்பட்டு பிரமதரின் பங்களிப்பு நிதியில் சேர்க்கப்படுவதாக பிரதமர் அலுவலகமும் சர்ச்சைக்கு விளக்கம் அளித்திருந்தது.
அந்த வகையில் இன்று ஜப்பானில் பிரதமர் மோடி அணிந்திருந்த உடை மீண்டும் வெகுஜனங்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து மீள் உருவாக்கம் செய்யப்பட்ட ஆடையை அவர் அணிந்திருந்தது தான் அதற்குக் காரணம்.
பிரதமர் மோடி அவ்வாறு மறு சுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை அணிவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வின் போது அவர் அணிந்திருந்த நீல நிற ஜாக்கெட் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
அந்த நீல நிற ஜாக்கெட்டும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டிகளில் இருந்து உருவாக்கப்பட்டது தான். பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் பிரதமர் மோடிக்கு அந்த நீல நிற சூட்டினை பரிசாக வழங்கி இருந்தது. தூக்கி எறியப்படும் பெட் பாட்டில்களில் இருந்து நவீன முறையில் உருவாக்கப்பட்டிருந்த அந்த சூட் தமிழ்நாட்டின் கரூரில் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும், அதையே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பிரதமர் மோடிக்கும் பரிசாக வழங்கியதாகவும் கூறப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட பெட் பாட்டில்களை சேகரித்து அவற்றை நசுக்கி உருக்கி வண்ணம் சேர்த்து நூலை உற்பத்தி செய்வதன் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட துணி தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை பல்வேறு உற்பத்தி நிலைகளில் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பை பெருமளவில் குறைக்கிறது. தற்போது மீண்டும் மறு சுழற்சி முறையில் உருவாக்கப்பட்ட ஆடையை அணிந்து ஜப்பானில் பிரதமர், ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவைப் பார்வையிட்ட புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: Bakhmut : "உக்ரைன் பக்முத் நகரை கைப்பற்றிவிட்டோம்" - ரஷ்யா பாதுகாப்புத் துறை!