வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஜூன் 21) முதல் வருகிற 24ஆம் தேதி வரை 4 நாட்கள் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார்.
அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியும், முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் வாசலில் வந்து வரவேற்று, அவரை வெள்ளை மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது வெள்ளை மாளிகையின் வாசலில் நின்று மூன்று பேரும் புன்னைகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும், இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடராளர் அரிந்தம் பகாச்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் உள்பட அவரது குடும்பம் சந்தித்த நிகழ்வு, நண்பர்கள் சந்திப்பே.
இந்த நேரத்தில் இரு தலைவர்களும் தங்களது நட்பைப் பகிர்ந்து கொண்டு சிறப்பான தருணங்களை போற்றுவதற்கான ஒரு சூழ்நிலையாக இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்தச் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவின் பிராந்தியங்களுக்கு செலுத்தப்பட்ட இசை அர்ப்பணிப்பை அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ரசித்தனர்.
இரவு விருந்தில் அதிபருக்கு பிடித்தமான பாஸ்தா மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவையும் அடங்கும். இவர்கள் உடன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் மற்றும் அவரது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகிய இருவரும் இருந்தனர். வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா மற்றும் புரோட்டாகால் துணைத் தலைவர் அசீம் வோக்ரா ஆகியோரும் வெள்ளை மாளிகைக்கு வந்தனர்.
முன்னதாக, தேசிய அறிவியல் அறக்கட்டளையில் வைத்து பிரதமர் மோடிக்கு ஜில் பைடன் விருந்து அளித்தார். அங்கு கல்வி மற்றும் பணியாளர்களின் முன்னுரிமையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர், இன்று (ஜூன் 22) வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளிப் பகுதியில் இரவு விருந்தை அளிக்க உள்ளனர். இந்த விருந்தில் 400 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோர், 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த அமெரிக்க புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்க உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், பழங்கால அமெரிக்கன் கேமரா, ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமரா மற்றும் அமெரிக்க காட்டு வாழ்க்கையின் புகைப்படத் தொகுப்பு அடங்கிய புத்தகத்தையும் பிரதமருக்கு பரிசாக வழங்க உள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Elon Musk: நான் மோடியின் ரசிகன் - எலான் மஸ்க்