சமர்கண்ட்:ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட்டில் இன்று (செப் 16) நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் "இந்தாண்டின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சிறப்பான தலைமை வகித்த அதிபர் மிர்சியோயேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று உலகம் முழுவதும் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவருகிறது. இந்த நேரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் உலக ஜிடிபியில் சுமார் 30 சதவீதத்தை பங்களிக்கின்றன.
உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ (Shanghai Cooperation Organization) நாடுகளில் வசிக்கின்றனர். எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே பெரும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. பெருந்தொற்று, உக்ரைன் பிரச்சனை ஆகியவை உலக விநியோக சங்கிலியில் ஏராளமான தடைகளுக்கு காரணமாகி உள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நமது பிராந்தியத்தில், நம்பிக்கையான, வலுவான பல்வேறு வகையான விநியோக சங்கிலிகளை உருவாக்க எஸ்சிஓ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு சிறப்பான தொடர்புகளுடன் முழுமையான போக்குவரத்து உரிமைகளை வழங்குவது அவசியமாகும். இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் இளம், திறமைமிக்க பணிப்படை இயல்பாகவே போட்டியை உருவாக்கி உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் இதுவே அதிகமாக இருக்கும். எங்களது மக்களை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரியில் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவதற்கு பெருமளவில் கவனம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் புதுமையை நாங்கள் ஆதரித்து வருகிறோம்.