வாஷிங்டன்: கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11இல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில், ஜூன் 21 அன்று உலக யோகா தினத்தை கடைபிடிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உலக யோகா தினத்தை கடைப்பிடித்து வருகின்றனர், என ஐ.நா. தெரிவிக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு உள்ள நியூயார்க்கில் உலக யோகா தினத்தை ஒட்டி பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “Ocean Ring of Yoga என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டின் உலக யோகா தினம் மேலும் சிறப்பு பெற்று உள்ளது.
இது கடல் பரப்பின் மீது யோகாவின் எண்ணங்களை அளித்து அதனை ஊக்குவிப்பது என்பதன் அடிப்படையில் உருவாகி உள்ளது. நமது ரிஷிகளும், முனிவர்களும் யோகாவை ‘யுஜ்யதே ஆனென் இடி யோகா’ என அழைக்கின்றனர். அப்படி என்றால், அனைத்தையும் ஒருங்கிணைப்பது என பொருள். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பமாக கருதப்படுகிறது.
நாம் எப்போதும் அரவணைக்கும் மற்றும் இணைக்கும் மரபுகளை கூறி வருகிறோம். நாம் புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றைப் பாதுகாத்தோம். நாம் பன்முகத் தன்மையை வளப்படுத்தி, அதனைக் கொண்டாடி உள்ளோம். யோகா நம்முடைய நுண்ணறிவை விரிவடையச் செய்கிறது. அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை யோகா நமக்கு உணர்த்துகிறது.