வாஷிங்டன் (அமெரிக்கா): வாஷிங்டனில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும் என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவில் முடிந்தவரை முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் என்று அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “இந்தியாவில் இயன்ற அளவு முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியாவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்பட உள்ளது. ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் உதவியுடன் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும்" என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை நிறுவப்பட இருப்பதையும், இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்காக, சிகாகோ பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் இருக்கையை மீண்டும் நிறுவுவதையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் வரவேற்று உள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து உள்ள நிலையில், விரைவில் அமெரிக்காவில் மிகப்பெரிய வெளிநாட்டு மாணவர் சமூகமாக மாறும் நிலையிம் இந்திய மாணவர்கள் உள்ளனர் என்று தெரிவித்து உள்ள அவர்கள், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு கல்வி கூட்டாண்மையை பிரதமரும் அதிபர் பைடனும் பாராட்டி உள்ளனர்.