ஜெர்மனி: உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. போர் விவகாரத்தில் இந்தியா தொடக்கத்திலிருந்தே இருநாடுகளுக்கும் ஆதரவு அளிக்காமல், நடுநிலையாக இருந்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜெர்மனி, ஃபிரான்ஸ், டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவை மேம்படுத்தவே இந்த பயணம் என்று கூறப்படுகிறது. முதல் நாளான நேற்று ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஓலாஃப் ஸ்கால்சை சந்தித்து, இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "கரோனா பரவலுக்குப் பிறகு, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார பிரச்சினையிலிருந்து மீண்டு வரும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் கனிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பதில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறேன். அண்மையில் மிகக்குறுகிய காலகட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் கூட, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளோம்.
இந்தியாவின் திறமையான தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுகின்றனர். இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான புலம்பெயர்வு ஒப்பந்தம் இருநாட்டு மக்களும் எளிதாக இடம்பெயர உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.
ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியா தொடக்கத்திலிருந்தே நடுநிலை வகிக்கிறது. போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தை ஒன்றே பிரச்சனையைத் தீர்க்க வழி. போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது, அனைவரும் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான், நாங்கள் அமைதியை வலியுறுத்தி வருகிறோம். உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.