பாரீஸ் (பிரான்ஸ்): பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் (Grand Cross of the Legion of Honour) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனால் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று (ஜூலை 13) தலைநகர் பாரீஸ் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று நடைபெற உள்ள பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக அதிபர் மாக்ரோனுடன் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, எலிசி அரண்மனையில் நடந்த விருது வழங்கும் விழாவின் புகைப்படங்களை ட்வீட் செய்து உள்ளார். “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்சின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் லெஜியன் ஆஃப் ஹானர் விருதை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார். இது கூட்டாண்மை உணர்வை உள்ளடக்கிய ஒரு அன்பான நிகழ்வு” என அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
"இந்திய மக்களின் சார்பாக அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்" என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக, பிரான்ஸ் அதிபர் மற்றும் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான், எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளித்தனர்.
நேற்று மாலை பிரதமர் மோடி புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது, பிரான்சில் UPI சேவையைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தார். ரொக்கமில்லா உடனடி கட்டணத்தில் இந்திய கண்டுபிடிப்புகளுக்கு, பிரான்ஸ் நாட்டில் ஒரு பெரிய புதிய சந்தையை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார்.