அபுதாபி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜூலை 13 ஆம் தேதி பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றிருந்தார். இந்த பயணத்தில் இருநாடுகள் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன. மேலும் இந்தியாவின் யுபிஐ சேவையை பிரான்சில் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தமும் இந்த பயணத்தின் போது கையெழுத்தாகி இருந்தது.
மேலும் பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு சந்தன மரத்தில் செய்த அழகிய கலை வேலைபாடுகளுடன் செய்யப்பட்டு இருந்த ஒரு சித்தாரை பரிசளித்தார். மேலும் அதிபரின் மனைவிக்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சந்தன பேழையில் தெலங்கானாவின் புகழ்பெற்ற போச்சம்பள்ளி புடவையினை பரிசாக அளித்து இருந்தார்.
பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் (Grand Cross of the Legion of Honour) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பிரதமர் மோடி இந்த பிரான்ஸ் பயணத்தின் போது பாஸ்டில் தினம் (Bastille Day) எனப்படும் பிரான்சின் தேசிய தினத்தில் கலந்து கொண்டிருந்தார்.
பிரான்சில் இரண்டு நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தனது பயணங்களை முடித்து விட்டு இன்று (ஜூலை 15) ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். அங்கு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) சந்தித்து இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவுகளை ஆய்வு செய்ய உள்ளார். முன்னதாக இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், “எனது நண்பர் ஹெச்.ஹெச். ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஈடுபாட்டிற்கு ஒரு புதிய உந்துதலைக் கொடுத்த விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA), கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கையெழுத்தானது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, மனித வளம் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதம் இந்திய மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரக பதிவுகளின்படி 2021-ஆம் ஆண்டில் அந்நாட்டில், இந்திய குடிமக்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Bastille Day: பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய படை - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!