ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா): தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற உள்ள 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜோகன்னஸ்பெர்க் சென்றடைந்து உள்ளார். தென் ஆப்பிரிக்கா அதிபர் சிறில் ராமபோஷாவின் அழைப்பின் பேரில், இன்று (ஆகஸ்ட் 22) முதல் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) வரை தென் ஆப்பிரிக்காவில் அரசு முறைப் பயணமாக பிரதமர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அங்கு குழுமி இருந்த இந்திய சமூக மக்கள், பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தென் ஆப்பிரிக்கா நடத்தி வருகிறது. முன்னதாக டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி, “வளர்ச்சி மற்றும் சீர்திருத்த அமைப்புகளை கொண்ட தெற்கு பகுதிகளின் விவகாரங்களை விவாதிப்பதற்கு பிரிக்ஸ் ஒரு தளமாக இருக்கிறது என்பதை நாங்கள் மதிக்கிறோம். ஒத்துழைப்பு மற்றும் நிறுவன வளர்ச்சிகளின் மதிப்பீட்டு பகுதிகளை அடையாளம் காண்பதற்கு பிரிக்ஸ் உச்சி மாநாடு ஒரு பயன் உள்ள வாய்ப்பை அளிக்கும்” என தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.