சான் ஃபிரான்சிஸ்கோ:இந்திய-அமெரிக்க கேந்திர கூட்டுமுயற்சி மன்ற மாநாடு மற்றும் இந்தோ- பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதனிடையே சான் ஃபிரான்சிஸ்கோவில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நமது செயல்களுக்கும், திறன்களுக்கும் இடையே உள்ள வேறுபாடே போதுமானது. சான் ஃபிரான்சிஸ்கோவில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தும் வேளையில், சமமான மற்றும் வளமான உலகை வடிவமைப்பதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், திறமைகளையும் கண்டு பெருமிதம் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.