இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் மற்றும் பயணிகள் பேருந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 35 முதல் 45 பயணிகளுடன் பேருந்து சென்றது.
பேருந்து பஞ்சாப் மாகாணம், பிண்டிபட்டியான் பகுதியில் உள்ள பைசலாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து பிண்டிபட்டியான் காவல்துறை அதிகாரி ஃபஹத் கூறும்போது, "டீசல் எற்றி வந்த வேன் மீது மோதியதில் பேருந்து தீப்பிடித்துள்ளது.
இந்த விபத்தில் 16 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த பலர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனர். இரண்டு வாகனத்தின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ நேரத்தில் விபத்து நடந்த இடத்தின் அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பேருந்தினுள் சிக்கிய மற்ற பயணிகளை பத்திரமாக மீட்டதாக" தொிவித்தார்.
பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் நடைபெற்ற ஆயிரத்து 659 போக்குவரத்து விபத்துக்களில் 17 பேர் உயிாிழந்தனர். மேலும் ஆயிரத்து 773 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி லாகூாிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சாலை விபத்துக்களால் காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக வந்ததால் அனைவரையும் கையாள முடியாத நிலை ஏற்பட்டதாக தொிவிக்கபட்டுள்ளது.