இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், அரசியல் குழப்பங்களுக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும். பாகிஸ்தான் நாட்டின் அரசியல் சூழல், கடந்த சில ஆண்டுகளாகவே, நெருக்கடிகள் மற்றும் குழப்பங்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது. 2022ஆம் ஆண்டில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்த பிறகு, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஜ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
ஷெபாஜ் ஷெரீப் பிரதமராகி ஒரு வருடம் கடந்து உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பிரதமர் ஷெபாஜ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது.
இந்த நிலையில், காபந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, தற்போதைய பிரதமர் ஷெபாஜ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரியால் ரியாஸ் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் காபந்து பிரதமர் பதவிக்கு அன்வர் உல் ஹக் கக்கார் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனையடுத்து, அன்வர் உல் ஹக் கக்கார் வகித்து வந்த பலுசிஸ்தான் அவாமி கட்சி தலைவர் பதவி மற்றும் செனட் சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று, நவாஸ் ஷெரீப், நான்காவது முறையாக பிரதமர் பதவி ஏற்பார் என்று முன்னாள் பிரதமர் ஷெபாஜ் ஷெரீப் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷெபாஜ் ஷெரீப், லண்டன் நகரில் இருக்கும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனரும், தனது சகோதரரும் மற்றும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக, அங்கு சென்று உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி, 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில், அவர் தங்கி விட்டார். இதன்பின்னர், அவர் பாகிஸ்தானிற்கு திரும்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இதனிடையே, ஜியோ நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமர் ஷெபாஜ் ஷெரீப் கூறி இருப்பதாவது, “நவாஸ் ஷெரீப், செப்டம்பர் மாதவாக்கில், பாகிஸ்தான் திரும்ப உள்ளார். விரைவில் நடைபெற உள்ள தேர்தலில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக, பிரதமர் பதவியை, அவர் ஏற்க உள்ளதாக” தெரிவித்து உள்ளார்.
நவாஸ் ஷெரீப், தன் மீது விதிக்கப்பட்டு உள்ள தகுதிநீக்கத்தை எதிர்த்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்து உள்ளார். தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் சட்டத்தின் மறு ஆய்வு 2023யின் படி, அரசியலமைப்புக்கு எதிரானது என்று வரையறுத்து உள்ளதால், நவாஸ் ஷெரீப்பின் மீண்டும் பிரதமர் கனவு, நிறைவேறாமல் போகவே, அதிக வாய்ப்பு உள்ளதாக, ஜியோ நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவின் சியாட்டலில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் பலி!