சியோல்:வட கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடற்படை கப்பலில் இருந்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், க்ரூஸ் (strategic cruise missiles) ஏவுகணை சோதனையை ஆய்வு செய்வதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு கடற்கரையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனையை பார்ப்பதற்காகவும், மதிப்பாய்வு செய்யவும் ஒரு ரோந்து படகில் ஏறினார். அதன் பின்னர், கடற்படையினர் க்ரூஸ் ஏவுகணையை ஏவுவதற்கான பயிற்சிகள் நடைபெறுவதையும் பார்த்தார் என்று கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், வட கொரியா தலைவர் ரோந்து படகில் இல்லாமல் வேறொரு இடத்தில் இருந்து ஏவுகணை ஏவுதலை கண்டது போல புகைப்படம் உள்ளது.மேலும் இந்த ஏவுகணை ஏவுதல் எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து (KCNA - Korean Central News Agency) கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இது குறித்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், மிகவும் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கும், கடலுக்கடியில் ஆயுத அமைப்பை நவீனப்படுத்துதலுக்கும் இவ்வகையான முயற்சியை எடுத்து வருவதாக கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் இருவரும் சந்தித்தபோது இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா - தென்கொரிய படைகள் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த அமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவப் பயிற்சிக்கு எதிர்வினையாக வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.