வடகொரியா: வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நடப்பாண்டில் வடகொரியாவின் ஆயுத சோதனைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வேகத்தில் காணப்படுவதாகவும், ஏவுகணை திட்டங்களை வேகமாக முன்னெடுத்துச் செல்கிறது என்றும் தகவல் வெளியானது. குறிப்பாக கடந்த மாதம் தொடக்கத்திலிருந்து வடகொரியா ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், வடகொரியா ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட தினவிழாவையொட்டி நடந்த ராணுவ அணிவகுப்பில், அந்நாட்டின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த விழாவில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் அணு ஆயுதங்களை மிக வேகமாக வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்திருந்தார்.