தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"நான் அதிபரானால், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவேன்" - குடியரசுக் கட்சி

அதிபராக தான் பொறுப்பேற்றால், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவேன் என அமெரிக்க அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே உறுதியளித்துள்ளார்.

Nikki
Nikki

By

Published : Feb 26, 2023, 1:32 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து 2024ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசுக் கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அதே கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக பதவி வகித்த நிக்கி ஹாலே, டிரம்ப் அதிபராக இருந்தபோது 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரையில், ஐ.நா. சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாகப் பணியாற்றினார். இப்போது ட்ரம்ப்பை எதிர்த்து நிக்கி ஹாலே களமிறங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் நிக்கி ஹாலே நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவேன். இதில், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற நாடுகளுக்கு கொடுத்து வீணடிக்க மாட்டேன். அமெரிக்காவின் எதிரிகளை எதிர்த்து நிற்கும் தலைவர்கள் மட்டுமே, மக்களின் நம்பிக்கையைப் பெற தகுதியானவர்கள்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு 46 பில்லியன் டாலர் பணம் வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக செலவிடப்பட்டுள்ளது. இது பிற நாடுகள் செலவிடுவதை விட மிக அதிகம். தங்களது வரிப்பணம் எங்கு போகிறது? யாருக்காக செலவிடப்படுகிறது? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளில் பெரும்பகுதி, அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா ஈரானுக்கு 2 பில்லியன் டாலர்களுக்கும் மேல் நிதியுதவி வழங்கியுள்ளது. பைடன் அரசாங்கம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை மீண்டும் வழங்கியது. அதேபோல், ஐ.நா.வின் ஊழல் நிறைந்த ஏஜென்சிக்கு அரை பில்லியன் டாலர்களை வழங்கியது.

ஐ.நா. வாக்கெடுப்புகளில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் ஜிம்பாப்வேக்கு பல மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அமெரிக்க எதிர்ப்பு நாடான சீனாவுக்கும், ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸுக்கும் அமெரிக்கா நிதி அளிக்கிறது. இது பைடன் அரசாங்கத்தில் மட்டுமல்ல, இரு கட்சிகளின் ஆட்சியிலும் பல தசாப்தங்களாக நடக்கிறது. மக்களின் வரிப்பணம் எதிரி நாடுகளுக்கு வழங்கப்படுவதை விட, இஸ்ரேல், உக்ரைன் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்க வலிமையான அதிபர் தேவைப்படுகிறார். நான் அமெரிக்காவின் வலிமை, பெருமை, மக்களின் நம்பிக்கை என அனைத்தையும் மீட்டெடுக்கவே அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உலக வங்கிக்கு தலைவராகும் இந்திய வம்சாவளி! யார் இந்த அஜய் பங்கா?

ABOUT THE AUTHOR

...view details