இந்தோனிசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு இன்று (நவம்பர் 15) தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், பருவநிலை மாற்றம், கரோனா பெருந்தொற்று, உக்ரைனில் நடைபெறும் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்டவை உலகம் முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. சர்வதேச விநியோக சங்கிலிகள் அழிந்து வருகின்றன. உலகம் முழுவதும் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவை உள்ள பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளின் ஏழை குடிமக்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் மோசமாகி விட்டன. ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு அமைப்புகளும் இதுபோன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக் கொள்ள தயங்கக் கூடாது. இதற்கான தகுந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் தவறிவிட்டோம். ஆகவே இன்று ஜி20 மாநாட்டின் விளைவுகள் குறித்து உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, நமது குழு அதிக முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.
உக்ரைன் போரை ராஜதந்திரம் மூலம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். கடந்த நூற்றாண்டில் இரண்டாவது உலகப் போர், சர்வதேச அளவில் சீரழிவை ஏற்படுத்தியது. போருக்குப் பிறகு, அப்போதைய தலைவர்கள் அமைதியை ஏற்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது நமது முறை வந்துவிட்டது. கரோனா காலகட்டத்திற்குப் பிறகு புதிய உலக ஒழுங்குமுறையை உருவாக்கும் பொறுப்பு நம் கையில் உள்ளது.