வாஷிங்டன் (அமெரிக்கா):நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை படம் எடுத்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வெளியிட்டார். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படம் இதுவாகும். அந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் நிரம்பியுள்ளன. விஞ்ஞானிகள் புகைப்படத்தை கண்டு ஆச்சரியத்தை வெளிபடுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கியது. சுமார் 10 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி கடந்த டிசம்பர் மாதம் தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து 1 மில்லியன் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜோ பைடன் பெருமிதம்
இந்தநிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. அதாவது, 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது என்று கூறப்படுகிறது நிலையில் இந்த படம் 13 பில்லியன் ஆண்டுகளில் இருந்த பிரபஞ்சத்தின் ஒளியை படம் எடுத்திருக்கிறது. கிட்டதிட்ட இது அந்த காலகட்டதில் இருந்த பிரபஞ்சம் என்று கூறப்படுகிறது. இதுவரை இதுபோன்ற புகைப்படம் எடுக்கவில்லை. இந்த படம் பிரபஞ்சத்தின் ஆழமான தோற்றத்தை காண்பிக்கிறது.
வண்ணப்படத்தை வெளியிட்டு அதிபர் ஜோ பைடன் கூறுகையில், "13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக உருவான மிகப் பழமையான ஒளி" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். "நூற்றுக்கணக்கான புள்ளிகள், கோடுகள், சுருள்கள், வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு சுழல்கள் கொண்ட இந்தப்படம் 'பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளி'" என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.
அதேவேளையில் ஹார்வர்ட் வானியலாளர் டிமிடர் சசெலோவ் கூறுகையில், இன்று நாம் பார்த்தது ஆரம்பகால பிரபஞ்சம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் மிக அழகாக உள்ளது என்றும் பல நாட்கள் காத்திருந்ததற்கு பலன் என்றும் தெரிவித்தார்.