டார்பூர்:சூடானில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்கு உள்ள ராணுவம் மற்றும் ஆர்எஸ்எப் எனப்படும் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (RSF) இடையே நாட்டை யார் ஆள்வது எனவும், ஆர்எஸ்எப் அமைப்பை ராணுவத்தினர் என அறிவிக்க வேண்டும் எனக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே நேரடி துப்பாக்கிச் சண்டை, வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. 6 மாதங்களைத் தாண்டி நடக்கும் போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலையால் லட்சக்கணக்கான பொதுமக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபிதல், சூடான் நாடு முழுவதும் இந்த போர் விரைவாகப் பரவியுள்ளது. RSF மற்றும் அதன் நட்பு அரபு படைகள் டார்பூர் பகுதியில் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், இந்த மோதலில் 9 ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து புலம் பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று (நவ.10) ஐ.நா கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ராபிட் சப்போர்ட் போர்ஸ் (RSF) சூடானின் முக்கிய பகுதியான டார்பூருக்கு முன்னேறி அதனைக் கைப்பற்றியுள்ளது.
டார்பூர் நகரில் துணை ராணுவம், ராபிட் சப்போர்ட் போர்ஸ், அரபு ராணுவம் நடத்திய தாக்குதலில் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், ராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல்-ஃபத்தா புர்ஹான் மற்றும் துணை ராணுவப் படையின் தளபதி ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ ஆகியோருக்கு இடையே வெளிப்படையான போர் நடைபெற்று வருகிறது என ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக மேற்கு டார்பூர் பகுதியில் இரு தரப்புக்கு இடையே நடந்து வரும் மோதலில், இரு தினங்களில் மட்டும் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் 100க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் துணை ராணுவம் சூடானின் பிரதான பழங்குடியினரான எல் ஜெனைனா பழங்குடியினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாகவும், இது இன அழிப்பு எனவும் சூடான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க:புத்துயிர் பெறுகிறதா விடுதலை புலிகள் இயக்கம்? இலங்கைக்கு மத்திய அரசு எச்சரிக்கை!