கார்டோம்: சூடான் நாட்டின் ராணுவத்திற்கும், உள்நாட்டு துணை ராணுவ அமைப்பிற்கும் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓம்டுர்மான் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த மோதலில் இதுவரை நடத்தப்பட்டு உள்ள தாக்குதல்களில், இது மிகவும் கொடூரமானது என்று உள்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக, சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தலைநகர் கார்ட்டோமுக்கு அடுத்த முக்கிய நகரமான ஓம்டுர்மானின் குடியிருப்புப் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இந்த விமானத் தாக்குதல் மிகவும் கொடிய ஒன்றாக கருதப்படுகிறது. தலைநகர் கார்ட்டோமில், கடந்த மாதம் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 5 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஓம்டுர்மான் நகரத்தில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து ராணுவம் தாக்கி உள்ளதாக துணை ராணுவ அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவர சம்பவங்களில், குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. அதில், ராணுவத் தலைவர் அப்டெல் பத்தாஹ் தலைமையிலான படை நடத்தி உள்ள இந்த வான்வெளித் தாக்குதலை கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.