தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Turkey Earthquake: பூகம்பத்தில் பூத்த பூ.. நிலநடுக்கத்தில் பிறந்த அதிசய குழந்தை! - turkey Syria earthquake death count live update

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000ஐ தாண்டிய நிலையில், சிரியாவில் இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூகம்பத்தில் பூத்த பூ.. சிரியா நிலநடுக்கத்தில் பிறந்த அதிசய குழந்தை!
பூகம்பத்தில் பூத்த பூ.. சிரியா நிலநடுக்கத்தில் பிறந்த அதிசய குழந்தை!

By

Published : Feb 8, 2023, 11:24 AM IST

சிரியா: நேற்றைய முன்தினம் (பிப்.6) தெற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.7 என்ற ரிக்டர் அளவில் பதிவானது. தொடர்ந்து அடுத்தடுத்து 7.6, 6.0 மற்றும் 5.6 ஆகிய ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது துருக்கி மட்டுமின்றி, அண்டை நாடுகளான லெபானன் மற்றும் சிரியாவிலும் ஏற்பட்டது. இதனால் துருக்கி மற்றும் சிரியாவில் 1,000க்கும் மேற்பட்ட கட்டங்கள் இடிந்து விழுந்தன.

இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வருகிறது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

அதேநேரம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பேரிடரின் மீட்புப்பணிக்காக பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. குறிப்பாக இந்தியா சார்பில் 101 மீட்புப்படை வீரர்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவை துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் துருக்கி அதிபர் ரிசப் தய்யீர் எர்டோகன், துருக்கியில் உள்ள 10 தெற்கு மாகாணங்களுக்கு 3 மாதங்களுக்கு அவசர காலமாக அறிவித்துள்ளார்.

மேலும் துருக்கியில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் காலவரம்பின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், துருக்கியின் எல்லைப்பகுதியில் உள்ள சிரியாவின் ஜிண்டாயிரிஸில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளிலிருந்து ஒருவர் பிறந்த குழந்தையைத் தூக்கி வருவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த குழந்தை கட்டட இடிபாடுகளில் சிக்கி இருந்தபோது, தனது தாயின் கருவறையிலிருந்து அதிர்ச்சியில் வெளி வந்துள்ளது. மேலும் தொப்புள்கொடி வெளிவந்த நிலையில் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டதாக, குழந்தையைக் கையில் எடுத்து வந்த காலில் அல் என்பவர் கூறியுள்ளார்.

முதலில் உடலில் சில காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இந்த குழந்தையின் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், உறவினர்கள் உள்பட அனைவரும் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இந்த பேரிடரில் பிறந்த இக்குழந்தையை உலகம் முழுவதும் ‘அதிசயக் குழந்தை’ (Miracle Baby) என அழைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - 2 நாட்களில் நான்காவது முறை!

ABOUT THE AUTHOR

...view details